கள்ளக்குறிச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டில் உள்ளதா? - ஆய்வு செய்ய மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டில் உள்ளதா? - ஆய்வு செய்ய மனுதாரருக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ (TAHDCO) நிறுவனத்தால் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சபரிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள அனுமந்தல் கிராமத்தில் நபார்ட் வங்கி உதவியுடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் கடந்த 2008-2009 நிதியாண்டில் 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.

2009-ம் ஆண்டே கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக சமூக நலக்கூடம் பாதிப்படைந்து வருவதோடு, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சமூக நலக்கூடத்தை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை அருகில் உள்ள கோயில் மற்றும் வேறு மண்டபங்களில் நடத்துகின்றனர். மேலும், எதிர்காலத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை இந்த மண்டபத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சமூகநலக் கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா, அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in