Published : 02 Jul 2022 07:53 AM
Last Updated : 02 Jul 2022 07:53 AM

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமாகா இளைஞர் அணி சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ மாணவர் களுக்கான நுழைவுத் தேர்வு கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார். உடன், இளைஞர் அணித் தலைவர் யுவராஜா உள்ளிட்ட நிர்வாகிகள். படம்: ம.பிரபு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமாகா இளைஞர் அணி சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு இலவச கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், வழங்கினார். நிகழ்ச்சியில் தமாகா மாநிலஇளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநிலபொதுச் செயலாளர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஜி.கே.வாசன் பேசியதாவது:

நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத் தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் பலிக்காமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிடவேண்டாம். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களிடம் இந்த கையேட்டை கொண்டு சேர்ப்போம். நீட் தேர்வு நல்லதா,கெட்டதா என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால், அது தேர்வு நேரத்தில் உங்களை பாதிக்கும். அடுத்தகட்டமாக தருமபுரியில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இளைஞர் அணி மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பூரண மதுவிலக்கு, அக்னி பாதை திட்டத்துக்கு வரவேற்பு, விவசாயிகள் தொலைநோக்குதிட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x