Published : 02 Jul 2022 07:29 AM
Last Updated : 02 Jul 2022 07:29 AM

தருமபுரி | புத்தகங்களை நமக்குள் அனுமதித்தால் உள்ளிருக்கும் இன்னொரு மனிதன் வெளிவருவான்: பாரதி பாஸ்கர்

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தகத் திருவிழா கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

புத்தகங்களை நம்முள் அனுமதிப்பதன் மூலம் உள்ளிருக்கும் இன்னொரு மனிதன் வெளிவருவான் என தருமபுரி புத்தகத் திருவிழா கருத்தரங்கில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா கடந்த 24-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் இரவு நடந்த கருத்தரங்கில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று, ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது:

இந்த தருமபுரியில் தான் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மன்னர் அதியமான் நெல்லிக்கனி தந்தார். பெண்பாற் புலவரை உயரிய மதிப்புடன் நடத்திய மண் இது.

இன்று நம்மில் பலரின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வது செல்போன்கள் தான். செல்போன்களும், இணையதளங்களும் மனிதர்களை அவற்றின் போக்குக்கு இழுத்துச் சென்றுவிடும். இவற்றை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.

செல்போன்களுக்கு பதிலாக நூல்கள் வாசிப்பில் நம் நேரத்தை செலவிட பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பழக்கம், மண்ணில் விழும் விதை துளிர் விட்டு செடியாகி, மரமாகி, மலர்களையும், கனிகளையும் விட்டு பலன் தருவதைப் போன்று நமக்கு பலனளிக்கும்.

பெற்றோர் வாசித்தால் அந்த வீட்டு குழந்தைகளும் அந்த சூழலுக்கு ஆட்படுவர். சிறுவயது முதலே வாசிப்பில் கவனம் செலுத்தும்போது குழந்தைகள் நற்சிந்தனையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக உருவாகுவர். குழந்தைகளின் மனது விசாலமடையும்.

புத்தகங்களை நம்முள் அனுமதிக்கத் தொடங்கினால், அது நம்முள் இருக்கும் இன்னொரு மனிதனை வெளிக்கொண்டு வரும் பணியை செய்யும். எனவே, தேவையற்ற செயல்களில் நேரத்தை விரயமாக்காமல் வாய்ப்பு அமையும்போதெல்லாம் அனைவரும் புத்தக வாசிப்பில் ஈடுபடுங்கள். புத்தகத் திருவிழா போன்ற இடங்களில் தேடிப்பிடித்து நல்ல நூல்களை வாங்கி பயனடையுங்கள்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சியில் இன்று (2-ம் தேதி) மாலை ஊடகவியலாளர் குணசேகரன், ‘தமிழகம் நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x