

சென்னை: திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோயிலில் தினமும் நான்குகால பூஜைகள், மாதம்தோறும் பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அன்னதானத் திட்டம் மூலம் தினமும் 300 பேர், விசேஷ நாட்களில் 500 பேர், திருவிழா காலங்களில் 800 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் 1988-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, விக்ரகங்கள் தானிய வாசத்தில் வைக்கப்பட்டன. கருவறை, மண்டபம் ஆகியவை உபயதாரர் மூலம் கட்டப்பட்டன. இந்நிலையில், தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.