

சென்னை: தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்ஸி தங்கையா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
சென்னையில் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டு இயக்கம் என்ற அமைப்பு கடந்த மாதம் 19-ம் தேதி நடத்திய நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் (LTTE), கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ், தேசவிரோத கருத்துகளை பேசியுள்ளார்.
‘‘தற்போது இஸ்லாமியர்களும், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரும் 40 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் ஒன்றுபட்டு தனி நாடு கோர வேண்டும்’’ என்று தேசவிரோதமாக அவர் பேசியுள்ளார்.
பாரத தேசம் மற்றும் மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்திலும், மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதத்திலும் ஜெகத் கஸ்பர் ராஜ் தொடர்ந்து பேசி செயல்பட்டு வருகிறார். தற்போது இஸ்லாமியர்களும், எஸ்.சி., எஸ்.டி. மக்களும் ஒன்றுபட்டு தனி நாடு கேட்க வேண்டும் என்று பேசியதோடு, தீய எண்ணத்தை விதைத்து, அதற்கான முயற்சியை தேசவிரோத சக்திகளோடு இணைந்து செயல்படுத்தியும் வருகிறார்.
இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில், மக்களின் மத்தியில் வன்முறையை தூண்டி, தனிநாடு கோரி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, ஜெகத்கஸ்பர் ராஜ் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.