Published : 02 Jul 2022 07:10 AM
Last Updated : 02 Jul 2022 07:10 AM

ஆவடி மாநகராட்சியில் புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர் அர.சக்கரபாணி திறந்துவைத்தார்

ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய இரு நியாயவிலைக் கடைகளை நேற்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்து, உணவு பொருள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய இரு நியாயவிலைக் கடைகளை நேற்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்து, உணவு பொருள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவர்த்தனகிரி பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அமுதம் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த நியாயவிலைக் கடை, 3,068 குடும்ப அட்டைதாரர்களை கொண்டு செயல்பட்டு வந்ததால், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தவிர்ப்பதற்காக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை, கோவர்த்தனகிரி பகுதியில் உள்ள 1,326 குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் பயன் பெறும் வகையில் ஒரு நியாய விலைக் கடை, பருத்திப்பட்டு - பஜனை கோயில் தெரு பகுதியில் 859 குடும்ப அட்டைதாரர்களுக்காக புதிய நியாய விலைக் கடை, கோவர்த்தனகிரி - அன்பு நகர் பகுதியில் 883 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற ஏதுவாக புதிய நியாய விலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுத்தது.

அந்த நடவடிக்கையின் விளைவாக, பருத்திப்பட்டு - பஜனை கோயில் தெரு மற்றும் கோவர்த்தனகிரி - அன்பு நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட இரு புதிய நியாய விலைக் கடைகளை நேற்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று திறந்து வைத்து, உணவு பொருள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், அவர், குடும்ப அட்டைதாரர்களிடம் கலந்துரையாடி, உணவுப் பொருள் விநியோகம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் என்.ராஜாராம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x