கிராமப்புற, கைவினைத் தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை தேவை: மானிய உதவிகளை வழங்க அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

கிராமப்புற, கைவினைத் தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை தேவை: மானிய உதவிகளை வழங்க அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் கிராம்புற ஏழை மக்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல், சுற்றுச் சூழலுக்கு உகந்த விற்பனையாகக் கூடிய பொருட்களை உருவாக்குதல், கிராமப்புற ஏழை மக்களிடம் தற்சார்பு நம்பிக்கை உருவாக்குதல், கிராமப்புற கைவினைஞர்களை ஒருங்கிணைந்து அவர்களின் உற்பத்தி, லாபத்திறனை மேம்படுத்துதல், கதர் மற்றும் கிராமத் தொழில்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைவினைத் தொழிலில் 800 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இவர்கள் தவிர பல்வேறு கிராமப்புறத் தொழிலில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.23.12 லட்சத்துக்கு காட்டன் துணிகளையும், ரூ.19.27 லட்சத்துக்கு பட்டுத் துணிகளையும், 3.63 லட்சத்துக்கு பாலியஸ்டர் துணிகளையும், சோப்பு, தோல் பொருட்கள் உள்ளிட்ட இதரப் பொருட்களை சுமார் ரூ.50 லட்சத்துக்கும் உற்பத்தி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, துணி வகைகளை பொறுத்தவரை உற்பத்தி மற்றும் விற்பனை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சோப்பு, தோல் பொருட்கள் உள்ளிட்ட கிராமம் சார்ந்து இயங்கக் கூடிய தொழில்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இது தொடர்பான விவரம் புள்ளியியல் துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

துணி வகைகள் தவிர்த்து ரூ.6 கோடியாக இருந்த இதர கிராமப்புற தொழிற் பொருட்களின் உற்பத்தி மதிப்பு ரூ.50 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களும் நலிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, “கிராமப்புற பொருளாதாரத்தில் கிராமப்புற தொழில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கிராமப்புற தொழிலை ஊக்குவிக்க சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் மானிய உதவிகளை வழங்க வேண்டும்.

அதற்கு போதிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையில் உடல் நலனுக்கு தீங்கில்லாத, சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லாத பொருட்களை உருவாக்கும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசும் முன் வர வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in