

கோவையில் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதில் நூதன முறைகேட்டில் ஈடுபட்டு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது :
கோவை சவுரிபாளையம் பகுதியில் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப் பும் தனியார் ஏஜென்ஸி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உடுமலை தேவ னூர்புதூர் பகுதியைச் சேர்ந்த கே.சதீஸ்குமார் (29), கே.அருண் குமார் (22) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
7 ஏடிஎம் இயந்திரங்களுக்கு இவர்கள், பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு செல்லும் வழியில் 7 ஏடிஎம் இயந்திரங்களுக்கு வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று இயந்திரங்களில் நிரப்பும் பணியை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வங்கியில் இருந்து எடுத்துச் சென்றுவிட்டு, அதனை நிரப்பாமல் மோசடி செய்துள்ளனர்.
இதன்படி, ஒரு கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து 300 ரூபாயை அவர்கள் முறைகேடு செய்தது அந்த நிறுவனத்தின் தணிக்கையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் கோவை கிளை மேலாளர் தாஹூர் அலிகான் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட 2 பேர் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.