Published : 02 Jul 2022 06:23 AM
Last Updated : 02 Jul 2022 06:23 AM
மதுரை: ரயில் மின்பாதையில் பறவை களின் கூடுகளை லைன் மேன் கள் நவீன இயந்திரம் மூலம் அகற்றுகின்றனர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயில் உள்ள 5,087 கி.மீ. பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 83 சதவீத பாதையான 4,204 கி.மீ. பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மின் பாதைகளை ரயில்வே மின்பாதை பிரிவு பராமரிக்கிறது. பராமரிப்புக்காக ரயில் பாதையில் இயங்கும் சிறிய நவீன ரயில் பெட்டியை பயன்படுத்துகின்றனர்.
கோட்ட அலுவலகத்தில் உள்ள மின் பாதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின் பழுது ஏற்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பது, பழுது உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மின் பாதையில் பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். இதனால் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக தினமும் ரயில் பாதையில் நடந்து செல்லும் லைன் மேன்கள் பறவைக் கூடுகளை கவனமாக அகற்றி வருகின்றனர்.
மேலும் விபத்து, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மின் பாதை பழுதுகளை உடனுக்குடன் சென்று சரி செய்து ரயில்கள் தாமதம் இன்றி செல்ல உதவுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT