Published : 02 Jul 2022 06:11 AM
Last Updated : 02 Jul 2022 06:11 AM
ஸ்ரீரீவில்லிபுத்தூர்: குடியரசு தலைவர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயான தேர்தல் அல்ல, இரு கொள்கைகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் மாநிலச் செயலாளர் முத்தரசன் உட்பட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருந்து சுமார் 5,000 பேர் பங்கேற்ற செம்படை பேரணி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அளித்த பேட்டியில், வரும் அக்டோபர் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு ஆந்திர மாநிலத்தில் நடைபெறுவதையொட்டி அதற்கு முன்பாக மாநிலம் முழுவதும் மாவட்ட மாநாடு நடைபெற்று வருகிறது.
தற்போது இந்திய பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடு களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில்தான் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
குடியரசுத்தலைவர் தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தல் என பார்க்கக் கூடாது.
இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கும் மதவாத அரசியலை முன்னிறுத்தும் பாஜக தலைமையிலான கட்சிகளைக் கொண்ட கூட்டணி கட்சிகளுக்கும் இடையே நடைபெறக் கூடிய தேர்தல் என்றார்.
மாநில செயலர் முத்தரசன் பேசுகையில், குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT