Published : 02 Jul 2022 06:27 AM
Last Updated : 02 Jul 2022 06:27 AM

திருச்சி | அதிகாரிகளின் ‘அரைகுறை’ தூர் வாரும் பணியால் அரை கி.மீ தொலைவுக்கு வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுநீர்

திருச்சி: திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் செய்த அரைகுறை தூர் வாரும் பணிகளால் பொன்மலைப்பட்டி சாலையையொட்டிய வாய்க்காலில் கழிவுநீர் வெளியேற வழியின்றி அரை கி.மீ தொலைவுக்கு தேங்கியுள்ளது.

திருச்சி மாநகரை அழகுபடுத்தி, தமிழகத்திலேயே தூய்மையில் முதன்மை மாநகராட்சியாக கொண்டு வர வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சாலைகளில் குப்பை தேங்காமல் உடனுக்குடன் அகற்றுவது, சாலையில் சென்டர் மீடியன்களுக்கு வர்ணம் தீட்டி மலர்ச்செடிகள் வளர்ப்பது, சிறு மற்றும் பெரிய பாலங்களை அழகுபடுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகரப் பகுதிக்குள் உள்ள அனைத்து மழைநீர், கழிவுநீர் வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன்படி திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள ஆவின் பால்பண்ணை, இலங்கைத் தமிழர் முகாம், மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரக்கூடிய மழைநீர், கழிவுநீரை பொன்மலைப்பட்டி சாலை, ஜி கார்னர் மைதானம் வழியாக முடுக்குபட்டி குளத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலை தூர் வாரும் பணிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, பொக்லைன்கள் மூலம் வாய்க்கால் கரையோரங்களில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு, வாய்க்காலின் அடிப்பகுதியில் படிந்துகிடந்த மண் குவியல், குவியலாக அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், வாய்க்கால் புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

ஆனால், பொன்மலைப்பட்டி சாலையையொட்டி அமைந்துள்ள வாய்க்காலில் வரக்கூடிய கழிவுநீர், ஜி கார்னர் மைதானத்தை ஒட்டிய வாய்க்காலில் செல்வதற்காக சாலையின் இடையே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை.

இதனால், அந்த இடத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகள் நிறைந்து, நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, பாலத்தின் ஒருபுறத்திலிருந்து, மறுபுறத்துக்குச் செல்ல வழியில்லாமல், இந்த வாய்க்காலுக்கு வரக்கூடிய கழிவுநீர் அனைத்தும் கடந்த ஒரு வாரமாக தேக்கமடைந்து, பொன்மலைப்பட்டி சாலையையொட்டிய வாய்க்காலில் அரை கி.மீ தொலைவுக்கு பெருகியுள்ளது. இங்கிருந்து மிகக் குறைவான அளவிலேயே கழிவுநீர் வெளியேறி, பொன்மலை ஜி கார்னர் மைதானத்தையொட்டிய வாய்க்காலில் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும், தேங்கிக்கிடக்கும் கழிவுநீரில் கடும் துர்நாற்றம் வீசுவதால், பொன்மலைப்பட்டி சாலை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும், இதிலிருந்து உற்பத்தியாகக்கூடிய கொசுக்களால் சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனி, சுந்தர்ராஜ் நகர், காவிரி நகர் பகுதி மக்கள் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “அரைகுறையாகச் செய்யப்பட்ட பணியால், தற்போது இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சாலைகளில் நடந்துகூட செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

கொசுக்கள் பெருக்கமடைந்துள்ளதால், வீடுகளில் இருக்க முடியவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பாலத்தின் அடிப்பகுதியிலும் தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, பிளாஸ்டிக் குப்பையை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்ல வழிசெய்ய வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதனிடம் கேட்டபோது, “இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x