10-ம் வகுப்பு தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 95% தேர்ச்சி: கடந்த எல்லா ஆண்டுகளையும் விட அதிகம்

10-ம் வகுப்பு தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள்  95%  தேர்ச்சி: கடந்த எல்லா ஆண்டுகளையும் விட அதிகம்
Updated on
2 min read

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 95 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது, கடந்த எல்லா ஆண்டுகளையும் விட அதிகமாகும்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வை 70 மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 6,608 பேர் எழுதினர். இதில், 6,273 பேர் தேர்ச்சியடைந்தனர்.

மாணவிகளே அதிகம்

வழக்கம்போல சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 3,579 மாணவிகள் தேர்வெழுதினர். இவர்களில் 3,470 மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். இது 96.95 சதவீத தேர்ச்சியாகும். மேலும், தேர்வெழுதிய 3,029 மாணவர்களில், 2,803 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இது 92.54 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டிலும், மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு 94.97 சதவீத மாணவிகளும், 88.90 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந் தனர்.

3 சதவீதம் அதிகம்

கடந்த ஆண்டு 92.15 சதவீதமாக இருந்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், கடந்த ஆண்டு பல்வேறு பாடங்களில் 375 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். ஆனால், நடப்பாண்டு 78 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதில், கணிதப் பாடத்தில் 15 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 56 பேரும், அறிவியல் பாடத்தில் 7 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

முதல் 3 இடங்கள்

சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.புவனேஸ் வரி, எம்.இ.அனிதா ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தை பிடித்தனர்.

கோயம்பேட்டில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயப்பிரியா, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மல்வின் ரோஷன் ஆகியோர் தலா 489 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவி சிந்தியா 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

நடப்பாண்டில் 250 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 1149 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.

தொடர்ந்து 4-வது முறை

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பள்ளிகள் தொடர்ந்து 4-ஆவது முறையாக 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டில் முதல் முறையாக 90 சதவீதத்துக்கு மேல் மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி பெற்றன. அப்போது தேர்ச்சி விகிதம் 91.47 சதவீதமாக இருந்தது. 2014-ம் ஆண்டு 90.74 சதவீத தேர்ச்சியும், 2015-இல் 92.15 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்த மாநகராட்சி பள்ளிகள் 2016-இல் 95 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in