Last Updated : 01 Jul, 2022 02:35 PM

 

Published : 01 Jul 2022 02:35 PM
Last Updated : 01 Jul 2022 02:35 PM

“ஆசிரியர்களை மதித்தால் உயரலாம்... நானே உதாரணம்” - மாணவர்களுக்கு அமைச்சர் கணேசன் அறிவுரை

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன்.

கடலூர்: “மாணவரை முட்டிப் போட வைத்தால், ஆசிரியர் கோர்ட்டுக்கும் போகும் நிலை உள்ளது” என்று என்று வழிகாட்டி நிகழ்வில் சி.வெ.கணேசன் பேசினார்.

கடலூர் திருப்பாதிருப்புரியூர் புனித வளனார் பள்ளியில் இன்று நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ எனும் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கான நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உயர் கல்விக்கான வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்ட அமைச்சர் கணேசன் பேசியது: ''கடலூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் ஒழுக்கத்திற்கு பெயர்பெற்றவர்கள். எந்த ஒரு மாணவரையும் மதிப்பெண்ணை வைத்து எடைபோட முடியாது. 40 மதிப்பெண் பெற்ற மாணவர் தகுதியற்றவர் எனவும், 100 மதிப்பெண் பெற்ற மாணவர் எல்லா தகுதியுடையவர் எனவும் கருதிவிட முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும். அதேபோன்று குடும்பச் சூழலைப் பொறுத்துத்தான் அவரது ஒவ்வொரு மாணவரின் உயர் கல்வியும் அமைக்கிறது.

நான் பள்ளிப் பருவத்தில் கழுதூரில் பயின்றபோது, பள்ளிக்கு காலதாமதமாக வந்ததால், அதைக் கண்டித்த அறிவியல் ஆசிரியர் வேணுகோபால் என்பவர், என்னைக் கண்டித்து முட்டிப் போட வைத்து, கையை தலைக்கு மேலே தூக்கச் சொல்லி அதில் புத்தகத்தையும், அதன் மீது செங்கல்லையும் வைத்து 45 நிமிடம் முட்டி போட வைத்தார். அவருக்கு என் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ இல்லை. ஆனாலும் சிறிய வயதில் எனக்கு நேரத்தின் அருமையையும் புரியவைத்து, பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். அவர் இன்றும் இருக்கிறார்.

எழுத்தறிவித்தவன் இறைவன். எனவே ஆசிரியர்கள் என்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். உலகத்தை உங்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள் அவர்கள் தான். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. மாணவரை முட்டிப் போட வைத்தால், ஆசிரியர் கோர்ட்டுக்கும் போகும் நிலை உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், பிற்காலத்தில் நீங்கள் சிறந்தவர்களாக உயர முடியும். அதற்கு நானும் ஓர் உதாரணம். எந்த மாணவரும் அறிவிலோ திறமையிலோ குறைவானவர் என கருதிவிட முடியாது. மாணவர்களாகிய நீங்கள் பொய் சொல்வது, புறம் கூறுவது, பொறாமைப்படுவதுக் கூடாது.

தமிழக மாணவர்கள் உலகளவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தமிழக முதல்வர் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். இதன் மூலம் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்தெந்தபடிக்கு உடனடி வேலைவாய்ப்பு, அரசின் உதவித் தொகையோடு பயிலக் கூடிய படிப்பு வகைகள் எவை என்பவை இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு விளக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்'' என்று அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x