Published : 01 Jul 2022 01:12 PM
Last Updated : 01 Jul 2022 01:12 PM

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெறுக: சீமான்

சீமான்

சென்னை: "மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடான இந்தியாவில் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச் சிறிதும் ஈவு இரக்கமின்றிக் கண்மூடித்தனமாக வரியை உயர்த்தும் மோடி அரசின் கொடுங்கோன்மைப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசுகளின் கடும் எதிர்ப்பினையும் மீறி மோடி அரசால் வலுக்கட்டாயமாக ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் தொழில்துறையினர், வணிகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை அதிக அளவில் உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் இத்தகைய ஜிஎஸ்டி வரி விதிப்பானது மாநில அரசுகளின் வரிவருவாயை பறித்து அவற்றின் கடன்சுமை அதிகமாகக் காரணமானதோடு, மக்களின் தலையில் கட்டுங்கடங்காத வகையில் விலையுயர்வு சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் கொடுஞ்செயலையும் மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கெனவே கைத்தறி சேலைகள் மற்றும் நூல் மீதான ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தியதும் அதனால் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலே நசிந்துபோகும் பேராபத்து ஏற்பட்டதை உணர்ந்து, கடுமையான எதிர்ப்போராட்டம் நடத்தியதும் பின் அம்முடிவு ஒத்திப்போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி, பிளேடு, உமிழ் மின்விளக்குகள், சூரிய ஒளி சூடேற்றிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீதான வரி உயர்வால் விவசாயப் பெருங்குடி மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

மற்ற நாடுகளிலெல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலக அளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடாக இந்தியா இருந்தபோதும் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்துவருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காரணமாகும்.

எனவே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x