

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,122, பெண்கள் 947 என மொத்தம் 2,069 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 909 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து, 75,185 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து ,26,065 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,008 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,094 ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின், மற்றும் மருத்துவ துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்பது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தீவிரமாக கண்காணிக்க ஏற்கெனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.