Published : 09 May 2016 03:39 PM
Last Updated : 09 May 2016 03:39 PM

ம.ந.கூட்டணிக்கான ஆதரவை முறியடிக்க முயற்சி: திமுக, அதிமுக மீது முத்தரசன் புகார்

ம.ந.கூட்டணிக்கு மக்கள் தரும் ஆதரவை முறியடிக்க திமுக, அதிமுக முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் புகார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விருதுநகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஏமாற்று வேலை. கரூரில் அன்புநாதன் குடோனில் இருந்து ரூ.500 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதைப் பற்றி தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அன்புநாதனைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால் அவர் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். கரூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்துள்ளார்.

அது குறித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை நம்பி எப்படிச் செயல்படுவது?.

ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் சக்கரபாணி, ஊராட்சித் தலைவர் முத்துப்பாண்டி உட்பட 15 பேர் வாக்கா ளர்களுக்குப் பணம் கொடுத்ததை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பிடித்தனர். இந்த இருவரையும் கைது செய்யாமல் அவர்களை பிடித்துக் கொடுத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூரில் அதிமுகவுக்கு ஆதரவாகவும், ஒட்டன்சத்திரத்தில் திமுகவுக்கு ஆதரவாகவும் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தலை ஜனநாயக ரீதியாக தேர்தல் ஆணையம் எப்படி நடத்தும் என்கிற கேள்வி எழுகிறது.

தமிழக அரசு கடனில் சிக்கித் தவிக்கும் சூழலில் இலவச திட்டங்களைச் செயல்படுத்த எங்கிருந்து பணம் வரும் எனத் தெரியவில்லை. மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இதை பண பலத்தாலும், வன்முறையாலும் சிதைக்க அதிமுக, திமுக முயற்சி செய்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x