

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த வேன் மீது, லாரி மோதியதில் ஒரு வயது குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி யைச் சேர்ந்த 25 பேர், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள கொண்டையன்பச்சேரி கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்க நேற்றுமுன்தினம் வேனில் வந்தனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அதே வேனில் இரவு 10.30 மணியளவில் இருக்கன்குடி புறப்பட்டனர்.
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மேலக்கரந்தை விலக்கு அருகே அதிகாலை 1 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு மாற்று டயர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேனில் இருந்தவர்கள் கீழே இறங்கி சாலையோரத்தில் நின்றிருந்தனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து கரிமூட்டை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி மிக வேகமாக சென்ற லாரி, வேன் மீதும், அதன் அருகே நின்று கொண்டி ருந்தவர்கள் மீதும் மோதியது.
இதில் இருக்கன்குடியை சேர்ந்த வெற்றி வேல்(25), மாரிசெல்வம்(20), சரவண குமாரி(24), சப்பாணி என்ற மாரிச்செல் வம்(40), தீபா(25), இவரது மகன் புதிய ராஜா(1), ராஜலட்சுமி(35), கமலம்மாள்(25) ஆகிய 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குட்டி என்ற மகேந்திரன்(40) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேன் ஓட்டுநர் பாலமுருகன், பேச்சியம் மாள், ராமகிருஷ்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்து, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். லாரி ஓட்டுநர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பனையன்குறிச்சியை சேர்ந்த மாரி என்ற மகேஷை கைது செய்தனர்.