Published : 01 Jul 2022 06:27 AM
Last Updated : 01 Jul 2022 06:27 AM

திருப்பூர் | இஸ்லாமியர்களுக்கான மத வழிபாட்டுத் தலத்துக்கு ‘சீல்' வைக்க எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்தம்பித்த போக்குவரத்து

திருப்பூர்: திருப்பூர் 15 வேலம்பாளையம்மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பள்ளிவாசல் அனுமதி இன்றி செயல்படுவதாகவும், அதை மூட வேண்டியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிவாசலுக்கு ‘சீல்' வைக்க போலீஸார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று காலை சென்றனர்.

அப்போது, இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ‘சீல்' வைக்க அனுமதிக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.

இதையடுத்து, தாராபுரம் சாலை உஷா திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டதுடன், மாநகராட்சி அலுவலகம் நோக்கி பேரணியாக வந்து, மாநகராட்சி சிக்னல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல, காங்கயம் சாலையில் சிடிசி கார்னர், புஷ்பா திரையரங்க வளைவு, அனுப்பர்பாளையம், மங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆனால், மாநகரில்பல மணி நேரம் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாநகரக் காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உட்பட பலர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு மேல் போராட்டம் நீடித்தது.

பேருந்துகள் இயங்காததால் வெளியூரில் இருந்து வந்தவர்கள், வெளியூருக்கு செல்ல நினைத்தவர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அவதிக்கு ஆளாகினர்.

நேற்று மாலை மழையுடன் பள்ளிக் குழந்தைகளும் வீடு செல்ல பேருந்து இன்றி சிரமத்துக்கு ஆளாகினர். போக்குவரத்து பாதிப்பு காரணமாக, மாநகராட்சி கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வருக்கு கடிதம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.க.செல்வராஜ் நேற்று அனுப்பியகடிதத்தில், "சொந்த இடத்தில்மசூதி ஏற்படுத்தி, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்தனர்.

அப்பகுதியின் குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்மசூதிக்கு ‘சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது, இஸ்லாமியமக்களிடம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்டனம்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைதியான குடியிருப்பு பகுதியில் வங்கதேச நாட்டை சேர்ந்த முஸ்லிம்கள் வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? இவர்களை வெளியேற்ற எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முயற்சிப்பாரா? அனைத்து மக்களும் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே, நடுநிலையோடு அவர் இருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர்கள் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி வரை குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தில் எந்தவித தொந்தரவும் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்லாமியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் கால அவகாசம் அளித்ததை கண்டித்து,தென்னம்பாளையத்தில் இந்து முன்னணியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x