Published : 01 Jul 2022 06:14 AM
Last Updated : 01 Jul 2022 06:14 AM

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்: போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

சென்னை புரசைவாக்கத்தில் சென்ற மாநகர பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள்.படம்: ம.பிரபு

சென்னை: பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மீண்டும் மேற்கொள்கின்றனர். எனவே, இவற்றை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பெருநகரில் மாணவர்கள் பேருந்துகளின், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து வந்தது. இந்த விவகாரம் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து சென்னை பெருநகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சென்னை போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அண்மையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

மேலும், தினமும் காலை, மாலை நேரங்களில் சாலை சந்திப்புகளில் நின்று படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை எச்சரித்தனர். அறிவுரைப்படி நடக்காத பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்துகளில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த மாணவர்களின் பெயர், முகவரியை பள்ளி, கல்லூரியின் அடையாள அட்டை மூலம் சரிபார்த்து,

அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்கும் கடிதம் மூலமாக தெரிவித்தனர். இதையடுத்து, படிக்கட்டு பயணம் கணிசமாக குறைந்தது.

தற்போது, போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கி செல்வது மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, போலீஸார் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி மாணவர்களை கட்டுப்படுத்துவதோடு, விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x