Published : 01 Jul 2022 06:53 AM
Last Updated : 01 Jul 2022 06:53 AM

திருவள்ளூர் | பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் 130 கிலோ தங்க நகைகள் வங்கியில் முதலீடு: பாரத ஸ்டேட் வங்கியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் 130.512 கிலோ பல மாற்று பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி முதலீடு செய்ய, அவற்றை பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒப்படைத்தார்.

திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் 130.512 கிலோ பல மாற்று பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி முதலீடு செய்ய, அவற்றை பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஒப்படைத்தார்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சுத்த தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டம் கடந்த ஆண்டு அக். 13-ம் தேதி தமிழக முதல்வரால், காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, 130.512 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை பாரத பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர்(அம்பத்தூர்) ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்வின்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது:

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் பலமாற்று பொன் இனங்கள் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் ஜூலை 5, 6, 7-ம் தேதிகளில் உருக்கப்பட்டு, சுத்த தங்கமாக மாற்றப்பட உள்ளது. அதன் பிறகு, சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படும்.

அவ்வாறு முதலீடு செய்யப்படும் சுத்த தங்க கட்டிகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கும் சுமார் ரூ.1 கோடி, இக்கோயிலின் அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருக்கும். மேலும், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், சென்னை, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் உட்பட 3 கோயில்களில் 18 மாதங்களில் தங்கத் தேர் செய்து முடிக்கப்படும்.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வரும் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x