Published : 01 Jul 2022 06:41 AM
Last Updated : 01 Jul 2022 06:41 AM

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகும் தமிழக சட்டப்பேரவை செயலகம்: வாக்குப்பெட்டி டெல்லியில் இருந்து ஜூலை 12-ல் வருகை

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை பணிகளையும் தமிழக சட்டப்பேரவை செயலகம் செய்து வருகிறது. தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பெட்டி 12-ம் தேதி டெல்லியில் இருந்து வருகிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் அதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதால், அனைத்து சட்டப்பேரவை வளாகங்கள், நாடாளுமன்ற வளாகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்ற செயலகத்தால் அச்சடிக்கப்படுகின்றன.

குறிப்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.இதில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான பேனா, தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை குழுக்கள் அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களான சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பப்படும் இடம் அதாவது நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை வளாகங்களில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.

ஆனால், உரிய காரணங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்போதுதான், உரிய வாக்குச்சீட்டுகள் அவர்கள் வசதிக்காக சம்பவ இடத்தில் வைக்கப்படும்.

வாக்குச்சீட்டுகளை போடுவதற்கான வாக்குப்பெட்டியானது தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று வரவேண்டும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து உரிய அதிகாரி டெல்லி சென்று, வரும் ஜூலை12-ம் தேதி பெட்டியை உரிய மரியாதை அதாவது, விமானத்தில் தனி இருக்கையில் வைத்து பாதுகாப்புடன் கொண்டு வருவார்.

அந்த பெட்டி இங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு அதன்பின், வாக்குப்பதிவன்று திறக்கப்படும். அதே போல் வாக்குப்பதிவு முடிந்ததும் அதே பாதுகாப்பு, மரியாதையுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும்.

இந்த வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x