Published : 01 Jul 2022 07:30 AM
Last Updated : 01 Jul 2022 07:30 AM
சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது வள்ளலார் சத்தியஞான சபை. இங்கு, வள்ளலாரின் கொள்கைக்கு மாறாக, சிவலிங்கம் உள்ளிட்ட தெய்வங்களை வைத்து சிலர் உருவ வழிபாடு நடத்தியதை எதிர்த்து தொண்டர்குல பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை கடந்த 2006-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத் துறைபிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:
வள்ளலார் கடந்த 1872-ம்ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின்படி, உருவ வழிபாடு கூடாது. சத்தியஞான சபையில் ஜோதி தீபம் மட்டுமே காட்டப்பட வேண்டும். அப்போது மக்கள் அமைதியாக நின்று ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை ஓதவேண்டும்.
வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் லட்சியம் வைக்க வேண்டாம் என வள்ளலார் கூறியுள்ளார். சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது என்பதால், அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படியே இந்த சபை நடத்தப்பட வேண்டும்.
சத்தியஞான சபை உள்ளிட்டவை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சபை நிர்வாகத்தையும், பூஜை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அறங்காவலர்கள், செயல் அலுவலரை சாரும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அறநிலையத் துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும், சத்தியஞான சபையில் முறைகேடுகள் நடப்பதாக அறநிலையத் துறையில் குறிஞ்சிப்பாடி ஜி.சுப்பிரமணியன் என்பவர் அளித்த மனுவை எதிர்த்தும் சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு கடந்த 2010-ம் ஆண்டு விசாரித்து, ‘‘வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது.
இதுதொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்’’ என்று கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து சபாநாத ஒளி சிவாச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் டி.ராஜா, டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘வடலூர் வள்ளலார் சத்தியஞான சன்மார்க்க சபையில் உருவ வழிபாடு கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்’’ என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்தியஞான சபையில் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிராக உருவ வழிபாடு கூடாது. இது தொடர்பாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு சரியானதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT