

ராமநாதபுரம் | திருப்புல்லாணி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி கேட்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே ஆலங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆலங்குளம், புதுக்குளம், கண்ணாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 93 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் இருந்த கழிப்பறை கட்டிடம் இடிந்துவிட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கழிப்பறை வசதியில்லை. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு இக்கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளி முன் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது கழிப்பறை வசதியை ஏற்படுத்தாவிட்டால் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும், அருகிலுள்ள வேறு பள்ளிகள் அல்லது வெளியூர்களில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளிகளில் சேர்க்கப் போகிறோம் என பெற்றோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். அதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குச் சென்றனர்.
திருப்புல்லாணி 12-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் திருமுருகன் கூறும்போது, இப்பள்ளியில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருமாறு 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்திலும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனாலும், நடவடிக்கை இல்லை. உடனடியாக மாணவ, மாணவிகளுக்கு தனியாகவும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தனியாகவும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கூறினார்.