

ஈரோடு: தாளவாடி பகுதியில் கடந்த 8 மாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் நேற்று சிக்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரகத்தில் உள்ள ஒசூர் பகுதியில் செயல்படாத கல்குவாரி உள்ளது.
இந்த கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை ஒன்று, அருகில் உள்ள தொட்டகாஜனூர், சூசைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து வளர்ப்பு நாய் மற்றும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
கடந்த 8 மாதங்களாக சிறுத்தையின் வேட்டை தொடர்ந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்து இருந்தனர். சிறுத்தை பதுங்குவதாகக் கூறப்படும் கல்குவாரி பகுதியை ஆய்வு செய்த வனத்துறையினர், அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றினர். மேலும், 10 நாட்களுக்கு முன்பு சிறுத்தையைப் பிடிக்க இறைச்சியுடன் கூடிய கூண்டு வைக்கப்பட்டு, சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை நேற்று காலை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. கால்நடை மருத்துவர் பரிசோதனையில் கூண்டில் சிக்கியது 4 வயதான ஆண் சிறுத்தை எனத் தெரியவந்தது.
மிகுந்த ஆக்ரோஷத்துடன் சிறுத்தை காணப்பட்ட நிலையில், அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு பவானிசாகர் அருகே மங்கலபதி வனப்பகுதியில் சிறுத்தையை விட வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கான பணிகளை மேற்கொண்டு இருந்தபோது கூண்டு பலவீனமாக இருந்ததால் சிறுத்தை கூண்டில் இருந்து தப்பி, வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.
சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு இருந்ததால் அதனால் அதிக தூரம் பயணிக்க முடியாத நிலையில், வனத்துறையினர் மீட்டு மீண்டும் கூண்டில் அடைத்தனர். கால்நடை மருத்துவர் அதன் உடல்நிலையை மீண்டும் பரிசோதித்து உணவளித்த பின்பு பவானிசாகர் வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது.