

சென்னை: டாஸ்மாக்போல வருமானம் கொட்டுவதாக இருந்தால்தான் வனத் துறை மீதும் அக்கறை காட்டுவீர்களா என்று, அந்நியமரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை (சீமைக்கருவேலம், பைன் உள்ளிட்ட மரங்கள்) அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வனத்துறைசார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலம், முதுமலை சரணாலயப் பகுதிகளில் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவுக்கு அந்நிய மரங்கள் வனப் பகுதியைஆக்கிரமித்துள்ளன.
போர்க்கால அடிப்படையில் அவற்றைஅகற்றாவிட்டால், நாட்டு மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ரசாயன முறைப்படி அவற்றின் பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனப் பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்ற ரூ.5.36 கோடி ஒதுக்கப்பட்டு, ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தருமபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் உள்ள அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. வேலை உறுதியளிப்பு திட்ட நிதியை இதற்கு பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்கிறது. அதேநேரம், இந்த வழக்கில் நாங்கள் நேரில் ஆய்வு செய்த பிறகும், அறிக்கை தாக்கல் செய்வதை தவிர, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
‘அரசின் திட்டங்கள் காகிதங்களில் மட்டும்தான் உள்ளது. செயலில் இல்லை. இந்த பணிக்காக வேலை உறுதியளிப்பு திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும். அந்நிய மரங்கள் அகற்றும் பணியை ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்களிடம் ஏன் ஒப்படைக்க கூடாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், எதற்காக ஆலோசனை நடத்த வேண்டும்?
அந்நிய மரங்களால் தமிழகத்தில் உள்ள வனப் பகுதிக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. டாஸ்மாக்போல வருமானம் கொட்டுவதாக இருந்தால்தான் வனத்துறை மீதும் அக்கறை காட்டுவீர்களா?
இவ்வாறு தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்நிய மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்து 3 வாரங்களில் திட்ட அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.