Published : 30 Jun 2022 11:38 PM
Last Updated : 30 Jun 2022 11:38 PM

திருச்சி மாமன்றக் கூட்ட விவாதத்தின்போது வீண் அரட்டை - பார்வையாளர் பகுதியில் இருந்து வீடியோ பதிவு

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் விவாதத்தின்போது வீண் அரட்டை, வீடியோ பதிவு செய்வது என வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் எனவும், இருக்கை ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிவிழா கண்ட திருச்சி மாநகராட்சியில் மாதம் ஒருமுறை சாதாரணக் கூட்டமும், தேவைப்படும் நேரங்களில் அவசரக்கூட்டமும் நடத்தப்படுவது மரபு. மேயர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று தங்களது கருத்துகள், குறைகள், கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்ற நேரத்தில்கூட சில கவுன்சிலர்கள் அதை கவனிக்காமல் அரட்டை அடிப்பது, ஏற்கெனவே ஒருவர் கேட்டு, மேயர் பதிலளித்த பிறகு அதே கேள்வியை மற்றொருவரும் கேட்டு நேரத்தை வீணடிப்பது, ஒரு கவுன்சிலர் எழுந்து பேசுவதை அருகிலுள்ள மற்றொரு கவுன்சிலரோ, பார்வையாளர் பகுதியில் இருப்பவர்களோ தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்வது என வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடந்தன.

அதேபோல இருக்கை ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும், பாரபட்சமின்றி பேச அனுமதிக்க வேண்டும் எனவும் சில கவுன்சிலர்கள் பேசினர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, ‘‘மண்டலத் தலைவர்களுக்கும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் முன்வரிசையில் இடம் கொடுக்கும் நடைமுறை இருந்துவந்தது.

ஆனால் இப்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், போட்டிபோட்டுக் கொண்டு முன்வரிசையில் அமர்ந்து கொள்கின்றனர். அதேபோல விவாதங்களின்போது கட்சித் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நடைமுறையும் இப்போது பின்பறப்படுவதில்லை.

மேலும், மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசக்கூடிய சில கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. முன்பெல்லாம் இக்கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய ஒளிப்பதிவாளர்களுக்கு முதல் 3 நிமிடங்களுக்கு மட்டுமேஅனுமதி வழங்கப்படும். ஆனால் இப்போது கூட்டம் முடியும்வரை எடுக்கின்றனர்.

இதுதவிர பார்வையாளர்கள் பகுதியில் இருக்கும் சிலரும் விவாதங்களை வீடியோ எடுக்கின்றனர். ஒருவேளை அவை, முழுமையாக வெளியே பரவும் பட்சத்தில் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும். எனவே, அவையின் கண்ணியத்தை காக்கும் வகையில், அடுத்துவரும் கூட்டங்களிலாவது இவற்றை முறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் கூறும்போது, “மாமன்றக் கூட்டத்தில் சிலர் மட்டுமே தொடர்ந்து பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். எனவே, அனைத்து கவுன்சிலர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 2 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயரும், கவுன்சிலருமான சுஜாதா கூறும்போது, ‘‘முதலில் ஒவ்வொரு கவுன்சிலருக்குமான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருவர், ஒரு இருக்கையில் உட்கார்ந்திருக்கும்போது வேறொருவர் வந்து, தள்ளி உட்காரச் சொல்கிறார். இதெல்லாம் சரியான நடைமுறை அல்ல. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்களை கட்சி வாரியாக உட்கார வைக்க வேண்டும்.

பெண்களுக்கென தனி வரிசைகள் ஏற்படுத்தி தர வேண்டும். மாமன்றத்துக்கென கண்ணியம் உள்ளதால் மேயர் வருவதற்கு முன்பே அனைத்து கவுன்சிலர்களும் உள்ளே வந்துவிட வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் தற்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள்கூட, மேயர் வந்தபிறகே உள்ளே வருகின்றனர். இதெல்லாம் தடுக்கப்பட வேண்டும். மாமன்ற கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் முத்துச்செல்வம் கூறும்போது, ‘‘கவுன்சிலர்களில் பலர் புதியவர்கள். அவர்களுக்கு எந்தக் கூட்டத்தில், எதைப் பேச வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரே பிரச்சினையை பற்றி பலர் பேசும்போது தேவையில்லாத நேர விரயம் ஏற்படுகிறது. தேவையற்ற பேச்சுக்கள், வீண்விவாதங்கள் நீண்ட நேரம் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. கூட்டத்தில் பேசக்கூடிய கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அவசியமின்றி வீடியோ எடுப்பதை தடுக்க வேண்டும்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் சு.சுரேஷ்கூறும்போது, ‘‘மாமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இருக்கை ஒதுக்கீட்டிலும், பேசுவதற்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘கடந்த கூட்டத்தில் 40 தீர்மானங்களுக்கும் மேல் இருந்ததாலும், மதிய நேரத்தில் பசியுடன் இருப்பதாக கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதாலும் விவாதத்துக்கு குறைந்த நேரமேஒதுக்கப்பட்டது. அடுத்தடுத்த கூட்டங்களில் இது சரி செய்யப்படும். அதேபோல கவுன்சிலர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டத்தில் அதுவும் சரி செய்யப்படும். மாமன்ற நடவடிக்கைகளை வெளிநபர்கள் வீடியோ பதிவு செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதனிடம் கேட்டபோது, ‘‘மேயருடன் ஆலோசித்து, அடுத்த கூட்டத்தின்போது இப்பிரச்சினைகள் எழாத வகையில் உரியதீர்வு காணப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x