Published : 30 Jun 2022 03:51 PM
Last Updated : 30 Jun 2022 03:51 PM

“எனக்கு விளம்பரங்கள் தேவையில்லை. கிடைத்த புகழை காப்பாற்றினால் போதும்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ராணிப்பேட்டை: "இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டையில் இன்று (ஜூன் 30) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது: "ராணிப்பேட்டை தொகுதியில் இருக்கக் கூடியவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் பெருமைப்படக்கூடிய வகையில் ஓர் அறிவிப்பு. பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும். இதனால், சர்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படும் காரணத்தால், 20 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

'ஸ்டாலின் விளம்பரப் பிரியராக இருக்கிறார்' அப்படி என்று சொல்லியிருக்கார். எனக்கு எதற்கு விளம்பரம்? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இனிமேல் எனக்கு விளம்பரம் எதற்கு? நரிக்குறவர் வீட்டுக்குப் போனார் - இருளர் வீட்டுக்குப் போனார் - அங்கே போய் அவர்கள் வீட்டில் சாப்பிட்டார் – என்றெல்லாம் வரும் செய்திகளை வைத்து அப்படிச் சொல்கிறார்கள், நான் கேட்கிறேன் அவர்களை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். அந்த ஒரு சந்திப்புக்குப் பின்னால் எத்தனை நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் முதலில் அறிந்திருக்கவேண்டும்.

நரிக்குறவர் வீட்டுக்கும், இருளர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, ‘இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை, அவர்கள் மனதில் ஆழமாக நாம் விதைத்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. ஏதோ ஒரு நாள் அவர்களது வீட்டுக்குச் சென்றதன் மூலமாக எனது கடமை முடிந்துவிட்டதாக நான் நினைத்து, அத்துடன் நான் சும்மா இருந்து விட்டேனா? ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் மறந்து விடவில்லை என்பதன் அடையாளமாகத்தான், தற்போது பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்தும் வருகிறோம். இன்றைக்கு 293 நரிக்குறவர் இன மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ராணிப்பேட்டை விழாவிலேயே இருளர் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, வீடு ஒதுக்கீடு ஆணை, முதியோர் உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை,வாக்களார் அடையாள அட்டை,சாதிச் சான்றிதழ்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை,சேமிப்பு வங்கிக் கணக்கு, நலவாரிய அட்டைகள் ஆகியவற்றை வழங்கி,விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்திருக்கிறோம்.

இன்று நலத்திட்ட உதவிகள் பெறக்கூடிய நபர்களில், 5,767 பேர் இருளர் இன மக்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரத்து 600 இருளர் பழங்குடியின மக்களில், 5,767 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.அதேபோல் திருநங்கையர் 20 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கிறது. 9,522 மாற்றுத் திறனாளிகளுக்கு 15 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் செய்யப்படவிருக்கிறது.

101 மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவசத் தையல் இயந்திரங்கள் வழங்கி, அவர்கள் மூலமாக, குறைந்த விலையில் மஞ்சள் பைகள் தயாரித்து விநியோகத்திட, நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது. இவை விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது அல்ல.

குழந்தைகளுக்குக் கொடுக்கும் புத்தகப் பைகளில், கடந்த ஆட்சியைப் போல, முதல்வரான நான் எனது படத்தை போட்டுக் கொண்டு இருந்தால், அதை விளம்பரம் என்று சொல்லலாம். திமுக ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்புக்கு வந்தபோது, நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர்களின் படத்தை அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட பைகள் இன்னமும் மீதம் இருக்கிறது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர், அதிகாரிகள் என்னிடத்தில் வந்து சொன்னார்கள். நான் உடனே சொன்னேன். அதைப் பயன்படுத்தாமல் போனால், 17 கோடி ரூபாய் அரசுக்கு வீண் இழப்பீடு ஏற்படும், செலவு ஏற்படும், பணம் வீணாகும், “பரவாயில்லை, முன்னாள் முதல்வர்கள் படமே இருக்கட்டும்” என்று சொல்லி. அந்தப் பைகளைக் கொடுக்கச் சொன்னவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கெனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.

> ‘திராவிட மாடல்’ என்று சொன்னால், காலமெல்லாம் இந்த ஸ்டாலின் முகம்தான் நினைவுக்கு வரும்.

> இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால் போதும்! என் குரல் நினைவுக்கு வரும் உங்களுக்கு.

> 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார்? என்றால், என் முகம்தான் நினைவுக்கு வரும்.

> அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பது, யார் ஆட்சிக் காலத்தில் அமலானது? என்று கேட்டால், என் முகம் தான் நினைவுக்கு வரும்.

> தமிழகத்தின் அம்பேத்கரான பெரியாருக்கும், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கருக்கும், அவர்களது பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யார்? என்றால், என் பெயர் தான் நினைவுக்கு வரும்.

> கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு எந்நாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். நான் என்று சொல்வது தனிப்பட்ட இந்த ஸ்டாலின் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக்கலவைதான் நான். என்றும் உங்களில் ஒருவன் தான் நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் மட்டும் நான் அல்ல! உங்கள் அனைவரது சேர்க்கையாக நான் அமர்ந்திருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் ஆட்சி தான் இது! நமக்கான ஆட்சி தான் இது.

இந்த ஆட்சியானது கடந்த பத்தாண்டு காலமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர் செய்து கொண்டிருக்கிறது. பள்ளத்தை நிரப்பிவருகிறது, துன்பங்களை போக்கி வருகிறது, தொய்வைத் துடைத்து வருகிறது. அதே சமயத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க எந்நாளும் உழைத்து வருகிறது. மீண்டும் சொல்கிறேன், நேற்றைக்கும் சொன்னேன், என் சக்தியை மீறியும் உங்களுக்காக உழைப்பேன், உழைப்பேன்.இந்த உதயசூரிய அரசு உழைக்கும் உழைக்கும், என்று உறுதியளிக்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x