Published : 30 Jun 2022 12:41 PM
Last Updated : 30 Jun 2022 12:41 PM

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன?

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிதாக கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71,103 பயனாளிகளுக்கு ரூ.267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் ரூ.32.18 கோடி செலவிலான 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.22.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71,103 பயனாளிகளுக்கு ரூ.267.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம்

> ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், 13.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது.

> மாவட்ட ஆட்சியரக கட்டடம், மொத்தம் 28,711 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

> இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் வருவாய் பிரிவு அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூலம், மக்கள் குறை தீர்வு அரங்கம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் மற்றும் எல்காட் பிரிவு அலுவலகங்களும் உள்ளன.

> முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் அறை, நேர்முக உதவியாளர்கள் மற்றும் பிரிவு அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கு, தேர்தல் மற்றும் வருவாய் அலுவலகங்களும் உள்ளன.

> இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் அறை, கூட்டரங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறுகூட்டரங்கம், கலந்தாய்வு அரங்கு, திட்ட இயக்குநர் (ICDS) அலுவலகங்களும் உள்ளன.

> மூன்றாம் தளத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மற்றும் பதிவுத்துறை அலுவலகங்கள், இணை இயக்குநர் (வேளாண்மை) பிரிவு அலுவலகம், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலகம், இணை இயக்குநர் (பொது சுகாதார பிரிவு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அலுவலகங்களும் உள்ளன.

> நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம் மற்றும் சிறு கூட்டரங்கம், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை, கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்), தமிழ் வளர்ச்சித்துறை, கனிம வளத்துறை, கூட்டரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

> மேலும், இவ்வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 12 மின்தூக்கிகள், அனைத்து தளங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான கழிப்பறை வசதி மற்றும் சாய்தள வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, கட்டடத்தை சுற்றிலும் சாலை வசதிகள், அலங்கார தெரு விளக்குகள், செயற்கை நீருற்றுடன் பூங்கா போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகள்

> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 13.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, கலவை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் சோளிங்கர், வாலாஜா மற்றும் கலவை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடங்கள்;

> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீக்கராஜபுரம், சிறுகரும்பூர் ஆகிய 2 ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், கே.வேளுர், சோமசமுத்திரம், ஆயிரமங்களம், முகுந்தராயபுரம் ஆகிய 4 ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள், சிறுணமல்லி மற்றும் வசூர் ஆகிய 2 ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், செம்பேடு மற்றும் கம்மாபாளையம் ஆகிய 2 ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள்;

> வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா வட்டாரம், லாலாபேட்டை மற்றும் திமிரி வட்டாரம் கலவை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்;

> உயர்கல்வித்துறை சார்பில் 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 30 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம்;

> நீர்வளத்துறை சார்பில் 5.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரக்கோணம் வட்டம், அரிகில்பாடி கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தளமட்ட சுவர் (தடுப்பணை);என மொத்தம் 150 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவிலான 24 முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப்பணிகள்

> நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 10.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம்;

> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னிகாபுரம்- பொன்னமங்கலம் சாலை, செய்யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலம்;

> வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 7.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணிபேட்டை மற்றும் அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்படவுள்ள புதிய பணிமனைக் கட்டடங்கள் (Work Shop);

> கால்நடை பரமாரிப்புத்துறை சார்பில் 48.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆற்காட்டில் கட்டப்படவுள்ள கால்நடை மருந்தகம்; என மொத்தம் 22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 71,103 பயனாளிகளுக்கு 267 கோடியே 10 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம்.முனிரத்தினம், நந்தகுமார், கார்த்திகேயன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x