Published : 16 Jun 2014 10:20 AM
Last Updated : 16 Jun 2014 10:20 AM

பாமக செயற்குழு சிறப்பு கூட்டம் திண்டிவனத்தில் 18-ம் தேதி நடக்கிறது: தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்த திட்டம்

பாமக தலைமை செயற்குழுவின் சிறப்புக் கூட்டம், திண்டிவனத்தில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற பாமக, தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். அவர் மீது சிபிஐ வழக்கு இருப்பதால், அமைச்சர் பதவி தர பாஜக தலைமை மறுத்துவிட்டது. இதனால், பாஜக மீது பாமக அதிருப்தியில் இருக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக பாமக தலைமை செயற்குழுவின் சிறப்புக் கூட்டம், திண்டிவனம் ஜே.வி.எஸ். மகாலில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கின்றனர். பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார்.

தமிழகம் முழுவதும் இருந்து பாமக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ஒன்றிய, நகரச் செயலாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் தேர்தலில் வெற்றி பெற்றால் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி கட்டாயம் தரவேண்டும் என பாமக வலியுறுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. சொன்னபடி அன்புமணி ராமதாஸூக்கு அமைச்சர் பதவியை தரவில்லை. இதற்கு பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததுகூட காரணமாக இருக்கலாம்.

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமகவின் கோட்டையாக தருமபுரி திகழ்கிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் பாமகவை வலுப்படுத்துவது குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படும். சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x