ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலை போராட்ட வீரர் ஜமதக்கனி பெயர் சூட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலை போராட்ட வீரர் ஜமதக்கனி பெயர் சூட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்.

தமிழகத்தில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் ஜமதக்கனி. மார்க்ஸ் எழுதிய 'Das Capital' என்ற நூலை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் அவர். அனைத்துக்கும் மேலாக தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஜமதக்கனி.

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஜமதக்கனி செய்த தியாகங்களும், படைத்த சாதனைகளும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் மக்களிடம்கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனியின் பெயர் சூட்டும்படி 09.03.2020-ல் கோரிக்கை விடுத்தேன். இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன் ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்; வளாகத்தில் அவரது சிலையையும் அமைக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in