சென்னை அருகே வேலூர் சர்வதேச பள்ளி திறப்பு விழா; பள்ளிக் கல்வியில் தாய்மொழி பயன்பாடு அவசியம்: வெங்கய்ய நாயுடு விருப்பம்

விஐடி கல்விக் குழுமம் சார்பில் சென்னை காயார் பகுதியில் நிறுவப்பட்டுள்ள வேலூர் சர்வதேசப் பள்ளியை நேற்று திறந்துவைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன், இணைவேந்தர் ஜி.வி.சம்பத், பள்ளியின் தலைவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர்.படம்: எம்.முத்துகணேஷ்
விஐடி கல்விக் குழுமம் சார்பில் சென்னை காயார் பகுதியில் நிறுவப்பட்டுள்ள வேலூர் சர்வதேசப் பள்ளியை நேற்று திறந்துவைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன், இணைவேந்தர் ஜி.வி.சம்பத், பள்ளியின் தலைவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர்.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

திருப்போரூர்: சென்னை அருகே காயார் பகுதியில், விஐடி கல்விக் குழுமம் சார்பில் 35 ஏக்கர் பரப்பில் வேலூர்சர்வதேசப் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து, 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐசிஎஸ்இ மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளன.

இப்பள்ளியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது:

விஐடி குழுமக் கல்வி நிறுவனங்களின் கல்விப் பயணத்தில் இதுமுக்கிய மைல்கல். தனியார் துறையில் உயர் கல்வியை வலுப்படுத்த விஐடி குழுமம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்பள்ளி அவர்களது மகுடத்தில் மற்றுமொரு சிறப்பு.

கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தலைசிறந்து விளங்குவதற்கான உணர்வை மாணவர்களிடையே பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிக் கல்வியில் தாய்மொழியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் தொடக்கநிலை வரையிலாவது, அரசு மற்றும்தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.

மாணவர்கள் சமூகச் சூழல், பள்ளி வளாகம், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.

விஐடி கல்விக் குழுமத் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசும்போது, “நாட்டிலேயே உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, பெண்கள் அதிகம் படிக்கின்றனர். கல்லூரிப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் சிறப்பானது. இதனை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். தனியார் பங்களிப்பு கல்வியில் மிக அவசியம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜி.வி. செல்வம், அனுஷா செல்வம், சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “உலகப்புகழ் பெற்ற விஐடி கல்வி நிறுவனம், தமிழகத்துக்குப் பெருமை. வேலூர்சர்வதேசப் பள்ளி உருவாக்கப்பட்டு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைப்பது பெருமைக்குரியது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு எனதமிழியக்கத்தை தொடர்ந்து நடத்திவருபவர் ஜி.விசுவநாதன். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், தாய்மொழிப்பற்று, தமிழ்ப் பண்பாடு, அறிவுக்கூர்மை, தொண்டுள்ளம் கொண்டவர்களாக மாணவர் சமுதாயம் வளரத் தேவையான விழுமியங்களை, இது போன்றகல்வி நிறுவனங்கள் புகட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in