

சென்னை: பணியின்போது உயிரிழந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பிற்பகல் 2.30 மணி அளவில் ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்ற கட்டாரி (26), இயந்திரத் துளையில் ஏதேனும் கல், துணி அடைக்கப்பட்டுள்ளதா என்று சாலையில் நின்று கவனித்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக இயந்திர துளையில் தவறி விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு ஒப்பந்த தொழிலாளியான ரவியும் விழுந்துவிட்டார்.
உடனடியாக, தீயணைப்பு துறையினர் வந்து இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நெல்சன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
ரவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த நெல்சன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர் கைது
தொழிலாளி பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளரை மாதவரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து உயிரிழப்பு குறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக ஒப்பந்ததாரரான மாதவரத்தை சேர்ந்த பிரகாஷ் (53), மேற்பார்வையாளர் வினிஸ் (33) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.