Published : 30 Jun 2022 06:14 AM
Last Updated : 30 Jun 2022 06:14 AM
சென்னை: பயணிகளின் உடமைகளை சோதிக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன ஸ்கேனர்கள் நிறுவப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்கள் உள்ளன. இந்த 2 நிலையங்களில் ஏற்கெனவே ஸ்கேனர்கள் செயல்பாட்டில் உள்ளன.
2 நிலையங்களுக்கும் ரயில் பயணிகள் வருகை நாளுக்குநாள் உயர்வதால், பயணிகள் உடமைகளை சோதிக்க கூடுதல் ஸ்கேனர்களை நிறுவ வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு அம்சங்கள் கொண்ட நவீன ஸ்கேனர்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3-வது நுழைவு வாயிலில் ஏற்கெனவே ஒரு ஸ்கேனர் உள்ளது. தற்போது, 4-வது, 5-வது நுழைவு வாயில்களிலும் ஸ்கேனர்கள் நிறுவப்படவுள்ளன.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே பிரதான நுழைவு வாயில் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர் செல்லும் நுழைவு வாயிலில் தலா ஒரு ஸ்கேனர் உள்ளது. தற்போது, புதிய ஸ்கேனர் மற்றொரு பிரதான நுழைவு வாயிலில் நிறுவப்படவுள்ளது.
இந்த ஸ்கேனர் விகன்ட் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கதிர்வீச்சு வெளியாவதை தடுக்கும் வகையில் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள், கடத்தல் பொருட்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உட்பட பல்வேறு பொருள்களை துல்லியமாக கண்காணிக்கும்.
இந்த நவீன ஸ்கேனர், கடத்தல் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதை தடுக்க உதவியாக இருக்கும். ஒரு ஸ்கேனரின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT