Published : 30 Jun 2022 07:14 AM
Last Updated : 30 Jun 2022 07:14 AM

தமிழின் மிகச்சிறந்த இலக்கிய நூலான நளவெண்பாவை தந்த புலவர் புகழேந்தியின் புகழ் பரவ மணிமண்டபம் வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: தமிழின் மிகச்சிறந்த இலக்கிய நூலான நளவெண்பாவை எழுதிய புகழேந்தி புலவருக்கு அவர் பிறந்த பொன்விளைந்தகளத்தூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் கனவு இன்றளவும் பலிக்கவில்லை.

தமிழ் காப்பியங்களில் பழமையானவற்றுள் ஒன்று நளவெண்பா. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்தி புலவரால் எழுதப்பெற்றது. புகழேந்தி புலவர், அன்றைய பாண்டிய நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பொன்விளைந்த களத்தூர்கிராமத்தில் பிறந்தார்.

வரகுணபாண்டியனின் அவையில் புலவராக இருந்த காலத்தில் பாண்டிய மன்னன் தன் மகளை சோழநாட்டு மன்னர் குலோத்துங்கனுக்கு மணமுடித்ததார். அப்போது பெண்ணுக்கான சீதனமாக பொன்னும் பொருளும் கொடுத்துவிட்டு கூடவே புகழேந்திப் புலவரையும் சீதனமாக வழங்கினார்.

சோழ நாடு சென்ற புகழேந்தி புலவரிடம் மன்னன் தெரிவித்த விருப்பத்துக்கு ஏற்ப மகாபாரத்தில் வரும் கிளைக் கதையான நளன், தமயந்தி கதையை காவியமாக உருவாக்கினார் புகழேந்தி. அதுதான் நளவெண்பா. சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என்ற 3 காண்டங்களுடன் 427 வெண்பாக்களால் ஆனது.

திறமையும் புலமையும் உடையகவிஞர்கள் மட்டுமே கையாளக் கூடியதாக இலக்கண நயங்களைக் கொண்ட வெண்பாவை படைப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக புகழேந்தி விளங்கினார். மேலும் நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தாலும் நளவெண்பா மிகவும் பிரபலமானது. பிற்காலத்தில் மள்ளுவ நாட்டைச் சேர்ந்த வள்ளல் முரணைநகர் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் புகழேந்தி வாழ்ந்து வந்தார்.

மிகச்சிறந்த இலக்கியநூலை தமிழுக்கு அருளிய புகழேந்தியின் புகழை மங்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பிறந்த பொன்விளைந்தகளத்தூரில் சில தமிழ் அமைப்புகள் சிறிய அளவிலான மணிமண்டபம் அமைத்து சில காலம் பராமரித்தன. நாளடைவில் அவர்களால் பராமரிக்க முடியாமல் போனது.

இதனை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கிராமமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இளைய சமுதாயம் புகழேந்தி புலவரை பற்றிதெரிந்து கொள்ளவும் தமிழின்பால் ஈடுபாடு ஏற்படவும் இந்த முயற்சி வழிவகுக்கும் என்கிறார்கள் அவர் பிறந்த பொன்விளைந்தகளத்தூர் கிராம மக்களும் தமிழ் ஆர்வலர்களும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x