

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, நாகை ஆகிய இடங்களில் வரும் ஜுன் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் சென்னையில் 26-ம் தேதி நடந்தது.
இக்கூட்டத்தில், 'மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இடதுசாரி கட்சியினர் மீது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 600-க்கு மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள், வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கொடூர வன்முறை வெறியாட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இதனைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை, நெல்லை, நாகை ஆகிய மையங்களில் வரும் ஜூன் 4-ம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜனநாய உணர்வுள்ளவர்களும், இடதுசாரிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.