

மதுரை: ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 9 பேர் முன்ஜாமீன் கோரி தாக்கலான மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் வழக்கில் அளித்த தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் ரஹமத்துல்லா என்பவர் பேசும் போது, நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக மதுரை அசன்பாட்ஷா, அபி புல்லா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அசன்பாட்ஷா, அபிபுல்லா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த அடிப்படையில் கோரிப் பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் அல்மாலிக் பைசல் நைனா, தவ்பீக், செய்யது நைனா, யாசர், அப்பாஸ், சீனி உமர் கர்த்தர், அல்டாப் உசேன் ஆகியோரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், இனிமேல் இவ்வாறு பேசமாட்டோம் என தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடுகளை மட்டும் செய்தோம். ஆர்ப்பாட்டத்தில் யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிக ளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். முன்ஜாமீன் வழங்கினால் மனுதாரர்கள் மீண்டும் குற்றம் புரிய வாய்ப்புள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில், தவறு செய்திருப்பதாக கூறவில்லை. குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும் கூறவில்லை என்றார். அதற்கு மனுதாரர்கள் வழக்கறிஞர்கள், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றனர்.
இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.