

சென்னை சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த பாபுசிங் (50) என்பவர் நேற்று முன்தினம் மாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். யானைக்கவுனி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
பாபுசிங் கடையிலும், பக்கத்து கடைகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளியின் உருவம் பதிவாகி உள்ளது. அதில் ஒரே ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் வந்து பாபுசிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக பாபுசிங்கின் செல்போனை கைப்பற்றி, அவர் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார் என்று போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பாபுசிங் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. அதனால் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
கொலையாளியை பிடிப்பதற்காக நேற்று முன்தினம் இரவில் சவுகார்பேட்டை, கொத்தவால்சாவடி, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாபுசிங்குக்கு கண்ணு (45) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.