Published : 30 Jun 2022 07:55 AM
Last Updated : 30 Jun 2022 07:55 AM
திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட மேலரண் சாலையை மீண்டும் சீரமைக்க தாமதப்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் நேற்று முன்தினம் இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநகரிலுள்ள பெரும்பாலான பிரதான சாலைகளும், குடியிருப்பு பகுதிகளிலுள்ள தெருக்களும் தோண்டப்பட்டு பள்ளம், மேடாக காட்சியளிக்கின்றன. ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் மிக மந்தமாக பணிகளை மேற்கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சூழலில், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள மேலரண் சாலையிலும் இப்பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டுமென அத்தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தார்.
எனினும் காலதாமதம் ஆனதால் நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தின் வாசலிலேயே கட்சியினருடன் சாலையில் இருக்கைகளை போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் திமுகவைச் சேர்ந்த மண்டலக்குழு தலைவர் மதிவாணன், கவுன்சிலர் சாதிக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் பாலு உள்ளிட்டோர் அங்குசென்று, சாலைப் பணிகள் தாமதம் ஆவதற்கான காரணங்களை எம்எல்ஏவிடம் விளக்கினர். மேலும், உடனடியாக தார் சாலை அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையேற்று எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினர் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மாவட்டத்திலேயே, அவரது கட்டுப்பாட்டிலுள்ள மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக, அவர் சார்ந்த கட்சியின் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT