

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கோயம்புத்தூருக்கு தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளுடன் புறப்பட்டது.
பேருந்தை காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டினார். இரவு 10 மணியளவில் பேருந்து புதியம்புத்தூர் அருகே புதூர்பாண்டியபுரம் சுங்கச்சாவடி பகுதியைக் கடந்து சென்றது. அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது. இதை கவனித்த ஓட்டுநர் சத்யராஜ், உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார்.
அப்போது பேருந்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகின.
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமார் தலைமையில் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர். புதியம்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.