Published : 30 Jun 2022 06:18 AM
Last Updated : 30 Jun 2022 06:18 AM
தூத்துக்குடி: “வாழ்க்கையில் வெற்றிபெற பின்புலம் முக்கியம் அல்ல. விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் உயர்ந்த நிலையை அடையமுடியும்” என, இஸ்ரோ முன்னாள்தலைவர் கே.சிவன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு' எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேசியதாவது: தமிழக அரசின் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பான திட்டம். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது.
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய நமது பின்புலம் முக்கியம் அல்ல. அரசு பள்ளியில் படிப்பது, தமிழ் மொழியில் படிப்பது போன்றவை நமது உயர்வுக்கு தடையாகாது. தளராத மனமும், கடின உழைப்பும்தான் முக்கியம்.
இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. உங்களது திறமை மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
தாழ்வு மனப்பான்மையை மாணவர்கள் முதலில் விட்டுவிட வேண்டும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். முன்மாதிரியாக யாரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்கள் தான் முன்மாதிரி. பொறியியல் மட்டுமல்ல என்ன படித்தாலும் இஸ்ரோவில் வேலை உள்ளது. நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க தைரியமாக அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு சிவன் பேசினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசியதாவது: கல்லூரி கனவு என்பது உங்களுடைய கனவுகளாக மட்டுமேஇருக்க வேண்டும். அது வேறுயாருடைய கனவாகவும் இருக்கக்கூடாது.
இன்னொருவருடைய ஆசைகளை நாம் நிறைவேற்ற முடியாது. நம்முடைய திறமை, ஆர்வம் எதில்இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்த உங்கள் முன்பு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல துறைகள் உள்ளன. எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது.
ஆனால் அதற்கான தேடல் அவசியம். படிப்பு என்பது நமது உரிமை.அந்த உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. படித்துவிட்டு வீட்டில்சும்மா இருந்துவிடக் கூடாது. தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசும்போது, “மாணவர்கள் இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி தன்னம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். முடியாது என கூறுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள். எதையும்ஈடுபாட்டோடு தன்னம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் வெற்றிபெற முடியும்” என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிளஸ் 2 முடித்த 1,500 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். ஐஎப்எஸ் தேர்வில் தேசிய அளவில்57-வது ரேங்க் பெற்ற சாத்தான்குளம் வனவர் சுப்புராஜுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT