Published : 29 Jun 2022 07:07 PM
Last Updated : 29 Jun 2022 07:07 PM

18 கி.மீ சுற்றிச் செல்லும் நிலை... திருவாளந்துறை - திருக்கல்பூண்டி மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கடலூர், பெரம்பலூர் மக்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருவாளந்துறை மற்றும் கடலூர் மாவட்டம் திருக்கல்பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 2 மாவட்ட மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், திருவாளந்துறை- திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கட்டாயம் இடம் பெறும். அந்தளவுக்கு இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் நாளை 2 மாவட்ட மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் 2017, ஆக.5-ம் தேதி நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘பெரம்பலூர்- கடலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில், திருவாளந்துறை- திருக்கல்பூண்டி இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்’’ என அறிவித்தார். ஆனால், அந்தத் திட்டம் இதுவரை தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதுகுறித்து மதிமுக மாணவர் மன்ற மாநில துணை அமைப்பாளர் தமிழருண், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ”பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள திருவாளந்துறை, இனாம், அகரம், வி.களத்தூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வேலைகள் நிமித்தமாக வெள்ளாற்றின் மறுகரையில் உள்ள கடலூர் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், திருவாளந்துறை கிராமத்தில் வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற தோலீஸ்வரர் கோயிலில் வழிபடவும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மற்றும் பல்வேறுதேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.

வெள்ளாற்றில் தண்ணீர் இல்லாதபோது, இரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆற்றில் இறங்கி நடந்தும், இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து செல்கின்றனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் இருந்தால், 18 கி.மீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திருவாளந்துறை- திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இதனிடையே, 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டம் இன்றளவும் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மேம்பாலம் கட்டும் பணியின் நிலை குறித்துபெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளரிடம் (கட்டுமானம்-பராமரிப்பு) கேட்டதற்கு, 2021, அக்.13-ம் தேதி பதில் வரப் பெற்றது.

அதில், ரூ.10.34 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு, திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் திட்ட அறிக்கைத் தயாரித்து அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் அமைவதன் மூலம்பெரம்பலூர், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களையும் சேர்ந்த 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கும் பயணத் தொலைவு, நேரம், அலைச்சல், எரிபொருள், செலவினம் ஆகியன மிச்சமாகும்.

எனவே, 2 மாவட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருவாளந்துறை- திருக்கல்பூண்டி இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியை அரசு உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x