தமிழகத்தில் வணிக வாகனங்கள் தணிக்கை: ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12.19 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் வணிக வாகனங்கள் தணிக்கை: ஒரு மாதத்தில் மட்டும் ரூ.12.19 கோடி அபராதம் வசூல்
Updated on
1 min read

சென்னை: வணிக வரித் துறை மூலம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில் ரூ.12.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வணிக வரித் துறையின் நுண்ணறிவு பிரிவு மூலம் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ள வாகனத் தணிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்திடுவதில் வணிக வரித் துறை மூலம் பெறப்படும் வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் உத்திரவிற்கிணங்க, வணிக வரித் துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப் பணிக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி 09.05.2022 முதல் 05.06.2022 வரை முடிவடைந்த நான்கு வாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக வரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46,247 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் 55,982 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1,273 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் எவ்வித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in