Last Updated : 29 Jun, 2022 06:05 PM

 

Published : 29 Jun 2022 06:05 PM
Last Updated : 29 Jun 2022 06:05 PM

கொல்லப்பட்ட ஓட்டுநருக்கு இழப்பீடு வேண்டும்: ஓலா நிறுவனத்தைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை: கொல்லப்பட்ட ஓட்டுநர் அர்ஜுனின் குடும்பத்துக்கு ஓலா நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓலா நிறுவனத்தின் கீழ் இயங்கிய அர்ஜூன் என்ற கார் ஓட்டுநர், அவரது காரை புக் செய்த பயணியால் கடந்த 25-ம் தேதி செங்கல்பட்டுக்கு அருகே கொலை செய்யப்பட்டார். அவரது வாகனத்தை திருடுவதற்காக இந்தக் கொலை நடந்துள்ளது. அர்ஜுனின் உடல், உடல் கூராய்வுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தை கண்டித்தும், அர்ஜுனின் குடும்பத்திற்கு இழப்பீடு வேண்டி சென்னை போக்குவரத்து ஆணையத்தில் அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் ஓலா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கு பெற்ற ஊழியர் ஒருவர் பேசும்போது, “ஓட்டுநர் அர்ஜுனின் மரணத்துக்கு ஓலாவின் சார்பாக இழப்பீடு அளிக்க வேண்டும். அர்ஜுனின் மனைவி இரண்டு மாத குழந்தையுடன் கஷ்டப்பட்டு வருகிறார். ஓலா, உபெர் போன்ற கார்ப்ரேட்டுகள் ஓட்டுநர்கள் விவரங்களை பெற்று கொள்கிறார்கள்.

இதன் மூலம் ஓட்டுநர்கள் போட்டோ உள்ளிட்ட விவரங்கள் பயணிகளுக்கு போகிறது. ஆனால். எங்களது வாகனத்தை புக் செய்யும் பயணிகளை பற்றிய தகவல்கள் எங்களுக்கு வருவது இல்லை. சில பயணிகளின் எண் கூட போலியாக உள்ளது.

ஓட்டுநர்கள் பாதுகாப்பு இல்லாமல்தான் வண்டியை இயக்குகிறார்கள். எங்களது வேண்டுகோள் இதுதான்... அர்ஜுனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். எங்களது வாகனத்தை புக் செய்யும் பயணிகள் குறித்த விவரவங்கள் எங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் நாங்கள் வண்டியை இயக்க முடியாது.

நாங்கள் ஓலாவை மட்டுமே நம்பி இல்லை. பிற தொழில்களையும் செய்கிறோம். ஓலா எப்போது வந்ததோ அப்போதே எல்லாம் அழிந்துவிட்டது. நாங்கள் 24 மணி நேரம் வண்டி இயக்குகிறோம். ஆனால், எங்களுக்கு இன்சூரன்ஸ் கூட கிடையாது. ஓலாவின் கீழ் வேலை செய்யும் ஓட்டுநர்கள் மரணம் அடைந்தாலோ, கொல்லப்பட்டாலோ அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்குவது இல்லை” என்று தெரிவித்தார்.

வீடியோ வடிவில் இங்கே...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x