

வேலூர்: எல்லை விரிவாக்கத்துடன் வேலூர் மாநகராட்சி தரம் உயர்ந்தாலும் அனைத்து பகுதி மக்களும் பயனடையும் வகையில் நகரப் பேருந்து சேவை கிடைக்காமல் உள்ளது. 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்திய வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய வேலூர் மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை, பெங்களூரு, திருப்பதி என மூன்று மாநிலங் களின் முக்கிய நகரங்களை இணைக்கும் நகரமாக உள்ளது.
திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த வேலூர் நகரம் (நகராட்சி) கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 60 வார்டுகளுடன் முதல் மாநகராட்சி தேர்தலை 2011-ம் ஆண்டு சந்தித்தது.
காட்பாடி, வேலூர், அணைக்கட்டு என 3 சட்டப்பேரவை தொகுதிகளின் பகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாநகராட்சியின் மக்கள் தொகை மட்டும் சுமார் 8 லட்சத்துக்கு மேல் இருக்கும். வேலூர் மாவட்டத்தின் பாதி மக்கள் தொகை வேலூர் மாநகராட்சியில் உள்ளது.
வேலூர் மாநகர எல்லை விரிவடைந்தாலும் மக்களின் தேவைகளில் முக்கியமான போக்குவரத்து பிரச்சினைக்கு பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் உள்ளது. குறிப்பாக, அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்து சேவை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.
26 நகர பேருந்துகள்
வேலூர் நகராட்சியாக இருந்த போதில் இருந்து தற்போது வரை காட்பாடி-பாகாயம் இடையில் 24 நகரப் பேருந்துகள் தடம் எண் 1 மற்றும் 2 என இயக்கப்படுகிறது. கூடுதலாக 1ஜி, 2ஜி பேருந்துகள் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் போது வழியில் காங்கேயநல்லூர் வழியாகச் செல்கிறது. இதை தவிர்த்து மாநகரின் முக்கிய அங்கமான சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் மற்றும் கொணவட்டம் பகுதி மக்களுக்கு நகரப் பேருந்து சேவை எட்டாக்கனியாகவே உள்ளது.
வேலூர் மாநகர மக்களுக்காக நகரப் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையாக இருக்கிறது. காரணம், மாநகர எல்லை விரிவாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
சர்குலர் பேருந்து
அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல அதிகளவில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. பெயரளவுக்கு 4 நகரப் பேருந்துகள் மட்டும் பாகாயத்தில் இருந்து அடுக்கம்பாறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்பதுடன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வேலூரில் இருந்து ஆரணி, திருவண்ணாமலை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டும்.
அந்த பேருந்துகளில் சிகிச்சைக்கு செல்பவர்கள் அவருடன் செல்லும் பாதுகாவலர்கள் அனைவரும் இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்படுகின்றனர்.
வேலூர் மாநகராட்சி மக்கள் அனைவருக்கும் நகரப் பேருந்து சேவை கிடைக்க சர்குலர் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. கிறிஸ்டியான்பேட்டையில் தொடங்கி, சத்துவாச்சாரி, அலமேலுமங்கா புரம், கொணவட்டம், அடுக்கம்பாறை, ஸ்ரீபுரத்தை இணைக்கும் வயைில் இந்த சர்குலர் பேருந்து சேவை இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேலு கூறும்போது, ‘‘நகரப் பேருந்து சேவை இல்லாததால் ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் செல்ல ஆட்டோவுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள் ளது. கிறிஸ்டியான்பேட்டையில் இருந்து அலமேலுமங்காபுரம் வரையும், பாகாயம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் அடுக்கம்பாறை வரை நீட்டிக்க வேண்டும்’’ என்றார்.
காந்திநகர் மக்கள் சேவை சங்க தலைவர் பகீரதன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், ‘‘காட்பாடியில் இருந்து அலமேலுமங்காபுரம், கொணவட்டத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வரையும், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் புதிய நகரப் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.