“பாஜகவினரின் போலிச் செய்திகளை அம்பலப்படுத்தியதே முகமது ஜுபைர் கைதுக்கு காரணம்” - ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எச்.எம். ஜவாஹிருல்லா. | கோப்புப் படம்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எச்.எம். ஜவாஹிருல்லா. | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “ஒவ்வொரு நாளும் பாஜக உட்பட பல தரப்பினரின் போலிச் செய்திகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காக உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எச்.எம். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர், டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது நபிகளாருக்கு எதிராக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் வெறுப்பு பேச்சை அம்பலப்படுத்தியவர் ஊடகவியலாளர் முகமது ஜுபைர்.

நுபுர் சர்மாவின் வெறுப்பு பேச்சின் தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தவுடன் ஒன்றிய அரசு உடனடியாக பாஜக கட்சியில் இருந்து நுபுல் சர்மாவை நீக்கியது. இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய அளவில் அறவழி போராட்டங்கள் நடத்தப்பட்டு நுபுர் சர்மாவை கைது செய்யச்சொல்லி கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை மத்திய அரசு நுபுர் சர்மாவை கைது செய்யவில்லை.

அதேசமயம் உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளர் ஜுபைர் பழிவாங்கும் நோக்கத்தோடு 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவு செய்த ஒரு ட்வீட்டை காரணமாக்கி கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது சம்பந்தமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா முகமது ஜுபைர் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார், ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

''பலமுறை கோரிக்கை விடுத்தும் முதல் தகவல் அறிக்கை நகல் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை'' என்று ட்வீட் செய்துள்ளார். வெறுப்பு பேச்சு பேசியவர்களை கைது செய்யாமல் உண்மையை உலகத்துக்கு எடுத்துக் காட்டிய அர்ப்பணிப்பு மிக்க பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு ஜனநாயகப் படுகொலை ஆகும்.

ஒவ்வொரு நாளும் பாஜக உட்பட பல தரப்பினரின் போலிச் செய்திகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காக உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in