விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அறிமுகம்: மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியீடு

விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அறிமுகம்: மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய முறை அமல்படுத்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது கடந்த ஆண்டு 60-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2004 முதல் பணியில்சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் பெறும் திட்டம்அமலில் உள்ளது. இவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர் ஓய்வுபெற்றால், அவர் பணியாற்றிய ஆண்டுகள் அடிப்படையில் முழு ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியாவார்.

ஒருவேளை ஒரு அரசு ஊழியர் சொந்த காரணங்களுக்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றால், அவருக்கும் முழு ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த 2020 மே மாதம் ஓய்வுபெறும் வயது 59-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், முன்பிருந்த வெயிட்டேஜ் முறை மாற்றப்பட்டது. அதன்படி, 54 மற்றும் அதற்கு முந்தைய வயதுகளில் ஓய்வுபெற்றால் 5 ஆண்டுகளும், 55 வயது என்றால் 4 ஆண்டுகளும், 56 என்றால் 3 ஆண்டுகளும், 57 என்றால் 2 ஆண்டுகளும், 58 என்றால் ஓராண்டும் வெயிட்டேஜ் வழங்கப்பட்டது.

இந்த வெயிட்டேஜ் ஆண்டுகள், பணியாற்றிய ஆண்டுகளுடன் சேர்க்கப்பட்டு, முழுமையாக கணக்கிட்டு, அதன்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2021 பிப்ரவரிமாதம் ஓய்வுபெறும் வயது59-லிருந்து 60-ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, வெயிட்டேஜ் அளவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 மற்றும்அதற்கு குறைந்த வயது என்றால் 5 ஆண்டுகள், 56 என்றால் 4 ஆண்டுகள், 57 என்றால் 3 ஆண்டுகள், 58 என்றால் 2 ஆண்டுகள், 59 என்றால் ஓராண்டு என வெயிட்டேஜ் மாற்றி அமைத்து, அதன்படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த வெயிட்டேஜ் முறை பயன்படுத்தப்படும் நிலையில், தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் வெயிட்டேஜாக சேர்க்கப்படும் ஆண்டுகளுக்கு சம்பளம் பெற முடியாது. ஓய்வூதியத்துக்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது.

விருப்ப ஓய்வுபெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு, ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படும் நிலையில், இந்த புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணையை தமிழக மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in