

புதுக்கோட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறந்தாங்கியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லா திண்டாட்ட நெருக்கடியை பயன்படுத்தி அக்னி பாதை திட்டத்தை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது.
இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் விவரங்களை சேகரித்து ராணுவத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று ராணுவ தளபதியே அறிவிக்கிறார். இந்தியாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாத ராணுவம், முதல்முறையாக தலையிட்டிருப்பது இத்திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களில் தற்காலிக முறையிலும், ஒப்பந்த முறையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கும், தனியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். ஆகவே, அரசுப் பணிகளில் தற்காலிக, ஒப்பந்த முறையே இருக்கக்கூடாது. நிரந்தர முறையில் மட்டுமே நியமனம் நடைபெற வேண்டும் என்றார்.