Published : 29 Jun 2022 06:28 AM
Last Updated : 29 Jun 2022 06:28 AM

திருப்பூர் சின்னகாளிபாளையத்திலுள்ள மூங்கில் பூங்கா வளாகத்தில் 96 மணி நேரத்தில் கட்டப்பட்ட பயிலரங்கம் திறப்பு

திருப்பூர்: ‘நமக்கு நாமே’ திட்டத்தில், திருப்பூர்மூங்கில் பூங்கா வளாகத்தில் 96 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பயிலரங்கம் நேற்று திறக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் வெற்றி அமைப்பு இணைந்து சின்னகாளிபாளையத்திலுள்ள அறிவியல் (மூங்கில்) பூங்கா வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்காக 96 மணி நேரத்தில் பயிலரங்க கட்டிடத்தை 3 நாட்களுக்கு முன்பு கட்ட தொடங்கியது. நேற்று காலை பயிலரங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நன்கொடையாளர்களுக்கு மாநகராட்சி மேயர்ந.தினேஷ்குமார் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, "தமிழகத்தில் முதல் முறையாக அரசின் பூங்காவில் ‘நமக்கு நாமே' திட்டத்தில் உயர்ரக ஃபீரிகாஸ்ட் கட்டிட தொழில்நுட்பத்தில் 96 மணி நேரத்தில் ஒரு பயிலரங்கை மாநகராட்சி கட்டியுள்ளது. உலக தரத்தில் 2400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

12 ஏக்கரில் 50 வகை மூங்கில் பூங்கா, சிறுவர் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் மாணவர் பயிலரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 50 சதவீத தனியார் பங்களிப்புடன் (ரூ.50 லட்சம்) கட்டப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

இந்த கூட்டு ஒப்பந்த முறையில் மாநகராட்சி நிலத்தில் கோவை கல்வியியல் நிறுவனம் மூலமாக, மூங்கில் இன வகைகளை நடுவதற்கும், அதற்குரிய சூழல் அமைப்பை ஏற்படுத்தவும், தொழில்நுட்ப ஆலோசனை 3 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும், அதன் பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம் 7 ஆண்டுகளுக்கு மூங்கில் இனங்களை பாதுகாத்து, பராமரித்து வளர்த்து ஒப்படைப்பு செய்யவும் கூட்டு ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவை உருவாக்கி 10 ஆண்டு பராமரிக்க வெற்றி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

96 மணி நேரத்தில் பயிலரங்கம் கட்ட உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மேயர்வழங்கினார்.

சூழலியாளர் கோவை சதாசிவம்பேசும்போது, "இன்றைய கல்விமுறை கணினி அறிவியலை நோக்கி மாணவர்களை தள்ளுகிறது. தாவரங்கள், பசுமைப்பரப்பு அதிகரிக்க வேண்டிய தேவை அல்லது பறவைகள் குறித்தோ சொல்ல தவறுகிறது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதுபோன்ற சூழல் கல்வி புகட்டும் பயிலரங்குகள் தேவை" என்றார்.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கோவிந்தசாமி, உமா மகேஸ்வரி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், டீமேஜ் பில்டர்ஸ் தலைவர் நந்தகோபால், ராயல் கிளாசிக் குழும தலைவர் கோபாலகிருஷ்ணன், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x