

தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்தவர்கள் ஊழலைத்தான் கொடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான எதையும் செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி ஏழுசாட்டுபத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான குளச்சல் வர்த்தக துறைமுகத் திட்டத்தை முறையாக தொடங்கி இருக்கிறோம். ரூ.21 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறைத் திட்டத்தால் மக்கள் அதிக பயன்பெறுகின்றனர். மிகக் குறைந்த முதலீட்டில் வேலைவாய்ப்பை பெருக்கவும், முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் இது உதவுகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகை யில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கன்னி யாகுமரி வரை சாலையை விரிவாக் கம் செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு உதவி
சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பு வந்தபோது புதுடெல்லியில் இருந்து ஓடோடி வந்து உதவி செய்தது மத்திய அரசுதான். தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்களை மத்திய அரசு மீட்டது.
தமிழகத்திலும், கேரளாவிலும் இருந்து மும்பைக்கு சென்ற சகோதரிகள் கொத்தடிமைகளாக தவித்தபோது அவர்களை மத்திய அரசு மீட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பிரேம் என்ற போதகரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடத்திச் சென்று 9 மாதங்கள் சிறைவைத்திருந்த நிலையில் அவரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ரேஷன் அரிசியை டெல்லி யில் இருந்து அனுப்பி வருகி றோம். ஆனால், அரிசி பொட்டலங் களில் எனது படத்தைப் போட்டுக் கொள்வதில்லை. ஏழைப் பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்ய சிரமப்படுகின்றனர். அதற்கு தீர்வுகாணும் வகையில் மத்திய அரசு இதுவரை 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் காஸ் இணைப்பை வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி எரிவாயு இணைப்புகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் ஊழலைத்தான் கொடுத்துள்ளனர். மக்களின் வாழ்க் கைக்கு தேவையான எதையும் செய்யவில்லை. நிலத்தில் நிலக்கரி ஊழல், காற்றில் 2ஜி ஊழல் போன்றவையே நிகழ்ந்துள்ளன. இப்போது ஹெலிகாப்டர் ஊழல் செய்தவர்கள் இத்தாலியில் இருந்த வாறே சுரண்டியிருக்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக மத்தியில் நாங்கள் ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறோம். தமிழக இளைஞர்கள், உங்கள் எதிர் காலத்தை கருதி பாஜகவுக்கு இம்முறை வாக்களியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.