Published : 29 Jun 2022 06:45 AM
Last Updated : 29 Jun 2022 06:45 AM

காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து விபத்து: கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

சென்னை: காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பிய மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

காசிமேடு சிங்காரவேலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் தர்மலிங்கம்,சம்பந்தம், சக்தி, கமலநாதன் ஆகியோர் கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். படகின் இன்ஜின் பழுதானதைத் தொடர்ந்து காற்றின் திசைக்கு ஏற்ப படகு கடலில் இழுத்துச் செல்லப்பட்டது.

மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை வரை கரை திரும்பாததால் அவர்களது உறவினர்கள் மீன்வளத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்து தேடுதல் பணியை மேற்கொண்டனர். சக மீனவர்களும் பைபர் படகுகளின் மூலம் தேடுதல் பணியை தொடங்கினர்.

இந்நிலையில், அதிவேக காற்றின் காரணமாக நேற்று அதிகாலை 4 மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள், கடலில் தத்தளித்த 4 பேரையும் மீட்டனர்.

பின்னர், மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீனவர்களை பத்திரமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். கரை திரும்பிய மீனவர்களை பார்த்ததும் அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x